நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம்?- மத்திய அமைச்சர் விளக்கம் !
நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் சாத்தியமா என்பது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய அவர், ''என்சிஇஆர்டியால் உருவாக்கப்பட்ட தேசிய பாடத்திட்ட உருவாக்கம், ஒவ்வொரு பள்ளியும் தனது பாடத்திட்டத்தையும் பாடப் புத்தகங்களையும் எப்படி உருவாக்கவேண்டும் என்ற விதிமுறைகளை வகுத்துள்ளது.
கல்வி அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலில் (மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல் இரண்டிலும் இருப்பது) வருகிறது. நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான பள்ளிகள், மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருகின்றன. இதனால் பள்ளிகளின் பாடத்திட்டங்களை அந்தந்த மாநிலங்களோ அல்லது யூனியன் பிரதேசங்களோ முடிவு செய்துகொள்கின்றன.
இதனால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தைக் கொண்டுவருவது சாத்தியமில்லை. மாநிலக் கல்வித் துறைகளும் எஸ்சிஇஆர்டிகளும் என்சிஇஆர்டிகளின் பாடத்திட்டத்தையோ, புத்தகங்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது அவர்களுக்காக சொந்தப் பாடத்திட்டத்தையும் உருவாக்கிக் கொள்ளலாம். இது அவர்களின் சொந்தத் தேவையைப் பொறுத்தது.
எனினும் அந்தப் பாடத்திட்டங்கள் இந்தியாவின் சுதந்திரப் போராட்டங்களையும் அரசியலமைப்பின் அடிப்படைக் கடமைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அதேபோல கலாச்சாரப் பாரம்பரியங்கள், சமத்துவம், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை, பாலின சமத்துவம், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், சமூகத் தடைகளை நீக்குதல் மற்றும் விஞ்ஞான மனநிலையைத் தூண்டுதல் ஆகியவையும் பாடத்திட்டத்தில் இருக்கவேண்டும்'' என்று அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment