அரசு பள்ளிகளின் தரம் தரைமட்டமாகி விட்டது:- நாஞ்சில் சம்பத்,அரசியல் விமர்சகர் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, August 12, 2019

அரசு பள்ளிகளின் தரம் தரைமட்டமாகி விட்டது:- நாஞ்சில் சம்பத்,அரசியல் விமர்சகர்

அரசு பள்ளிகளின் தரம் தரைமட்டமாகி விட்டது:- நாஞ்சில் சம்பத்,அரசியல் விமர்சகர்


ஒரு தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளியை தரம் உயர்த்துவதற்கு எந்தவிதமான நடவடிக்கையையும் இவர்கள் மேற்கொள்ளவில்லை. தமிழகத்தில் இருக்கிற அரசு பள்ளிகளில் பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகளில் கழிப்பறை கிடையாது. பல பள்ளிகளில் குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் ஓய்வு பெற்றதற்கு பிறகு அந்த இடத்தை நிரப்புவது இல்லை. மாணவர்கள் 100க்கு 90 மார்க் வாங்க வேண்டும் என்று பயிற்சி அளிக்கிற எந்த திட்டமும் அரசிடமும் இல்லை. அந்த பள்ளிகளின் முதல்வர்களிடமும் இல்லை. தரம் குறைந்து விட்ட அரசு பள்ளிகளில் கல்வி கற்றால் தங்கள் பிள்ளைகளுக்கு எதிர்காலம் இல்லை என்ற பெற்றோர்களின் கவலைக்கு தீர்வு காண்பதற்கு இந்த அரசிடம் எந்த திட்டமும் இல்லை. அரசு பள்ளிகளின் தரம் தரைமட்டமாகி விட்டது. அரசு பள்ளியில் இருக்கிற மாணவன் வாழ்க்கை கரை சேருமா? என்ற நம்பிக்கை பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் இல்லை.

அரசு பள்ளிகள் மீது தமிழ்நாட்டு மக்களுக்கு அக்கறை இல்லை என்று மக்களை பழித்து பேசக்கூடாது. அரசு பள்ளியில் தமிழ்வழி பயின்ற மாணவர்களுக்குத் தான் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று நாளைக்கு அறிவித்தால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் படையெடுத்து வருவார்கள். மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து கையூட்டு பெற்று கொண்டு அந்த பள்ளிகளை வாழ வைப்பதற்காக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதால் அரசு பள்ளிகளை மூடப்போகிறோம் என்று அறிவித்து விட்டார்கள். அதனால் தான் பள்ளிகளை மூடிவிட்டு நூலகமாக்க போகிறோம் என்று அறிவித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நூலகமாவது இயங்குகிறதா? நூலகத்திற்கு புத்தம் புது நூல்கள் வருவது உண்டா? நூலகத்திற்கு புத்தகம் வாங்குவதற்கு நிதி ஒதுக்குவதில் இந்த அரசு என்றைக்காவது அக்கறை காட்டியது உண்டா?

நூலகங்கள் நூலாம்படையாக மாறிவிட்ட பிறகு அரசு பள்ளிகளும் நூலகமாகிறது என்று சொல்வது. யாரையோ ஏமாற்றுவதற்கு, ஆகவே புதிய கல்வி கொள்கைக்கு கடுமையான எதிர்ப்பு காட்ட தவறிய இவர்கள், மாநில அரசின் உரிமையை டெல்லியில் அடகு வைத்த இவர்கள், தமிழ்நாட்டின் பள்ளிகளை மூடப்போகிறார்கள் என்ற செய்தி எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. அதிர்ச்சியை அளித்துள்ளது. அரசு ஆசிரியர் பள்ளி சங்கம் ஒரு அழுத்தமான குற்றச்சாட்டை இந்த அரசு மீது வைத்துள்ளது. மெட்ரிக் பள்ளியில் மாணவர்கள் ேசருவதற்கு எல்லா வகையிலும் உதவியாக இருப்பது இந்த அரசு தான் என்ற குற்றச்சாட்டை அவர்கள் வைத்திருக்கிறார்கள். இந்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருக்கிறது. தனியார் பள்ளிகளில் சேர்வதால் தான் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைகிறது என்பதை அரசு கண்டுபிடித்தும் அதை ஊக்குவிப்பது ஏன்?அரசுப்பள்ளிகள் மூடப்படுகிறது என்ற செய்தி வருகிறது என்றால், அன்னை தமிழ் தன்னுடைய முக்கியத்துவத்தை இழக்கிறது.

அரசு பள்ளிகள் மூடப்படுகிறது என்றால் விளிம்பு நிலை மக்களின் கல்வி கேள்விக்குறியாகிறது. இதை புரிந்து கொண்டு முன்னாள் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி தேவி, கல்வியாளர்கள் நெடுஞ்செழியன், பிரின்ஸ் கஜேந்திரபாபு போன்றவர்களை கலந்து ஆலோசிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் தலைமையில் ஒரு குழுவை அமைத்து அரசு பள்ளிகளை மீட்டு எடுப்பதற்கு வழிமுறை என்ன என்று அரசு அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். தமிழ்வழி பயின்ற மாணவர்களுக்குத்தான் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று நாளைக்கு அறிவித்தால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் படையெடுத்து வருவார்கள்

Post Top Ad