முதுநிலை டிப்ளமோ படித்தவர்கள் மருத்துவப் பேராசிரியர் ஆகலாம்: விதிகள் திருத்தியமைப்பு
முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்பு நிறைவு செய்தவர்களும் வருங்காலத்தில் மருத்துவக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாகப் பணியாற்ற வகை செய்யப்பட்டுள்ளது.
இதற்கான விதிகளை இந்திய மருத்துவக் கவுன்சிலின் வாரிய உறுப்பினர்கள் திருத்தியமைத்துள்ளனர். அதற்கான அறிவிக்கை கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
மருத்துவப் பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் பற்றாக்குறை பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தியா முழுவதும் 529 மருத்துவக் கல்லூரிகளில் 80 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதேபோன்று முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 45 ஆயிரம் இடங்கள் உள்ளன.
அவற்றின் வாயிலாக ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உருவாக்கப்பட்டாலும், மருத்துவக் கல்லூரிகளில் போதிய எண்ணிக்கையில் பேராசிரியர்கள் இல்லை.
இந்த நிலையில், இந்த விவகாரத்துக்குத் தீர்வு காணும் விதமாக முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்புகள் நிறைவு செய்தவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் வகுப்புகள் எடுக்க வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு ஏற்றவாறு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பணியிட விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய மருத்துவக் கவுன்சிலின் வாரிய உறுப்பினர்கள் அந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அடுத்த சில நாள்களில் புதிய நடைமுறை அமலுக்கு வரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.