TET 2019 மறுதேர்வு நடத்தப்படுமா? தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை!! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, August 23, 2019

TET 2019 மறுதேர்வு நடத்தப்படுமா? தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை!!


"டெட்" எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வில், 99 சதவீதம் பேர் தேர்ச்சி அடையாத நிலையில், மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என தேர்வெழுதியவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


2019-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு, கடந்த ஜுன் 8, 9-ம் தேதிகளில் நடைபெற்றது. இதன் முதல் தாள் தேர்வு முடிவானது செவ்வாயன்று வெளியானது.

அதன்படி முதல் தாள் தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 62,314 பேரில், ஒரு லட்சத்து 61, 832 பேர் தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இதில் வெறும் 482 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். மொத்த மதிப்பெண்ணான 150-க்கு அதிகபட்சமாக 99 மதிப்பெண்ணும் குறைந்தபட்சமாக ஒரு மதிப்பெண்ணும் தேர்வாளர்கள் பெற்றனர்.மொத்தமாக 0.34 சதவீதம் பேர் மட்டுமே இத்தேர்வில் தேர்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில் 2-ம் தாள் தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ள நிலையில், அதிலும் 99 சதவீதத்திற்கும் அதிகமானோர் தோல்வியடைந்துள்ளனர்.

ஜூன் 9-ம் தேதி நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளில், 3 லட்சத்து 79, 733 பேர் பங்கேற்றனர்.  இதில், 3 லட்சத்து 79,385 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்வெழுதியவர்களில் 324 பேர் மட்டுமே தேர்ச்சி பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட 82 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர் .

மொத்த மதிப்பெண்ணான 150-க்கு அதிகபட்சமாக 96 மதிப்பெண் பெறப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு முடிவில் 0.08 சதவீதம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாளில் அரை சதவீதத்துக்கும் குறைவானோர் பேர் மட்டுமே தேர்ச்சியடைந்த நிலையில், 2-ம் தாளில் அதைவிட குறைவானோர் தேர்ச்சியடைந்திருப்பது கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய தேர்வு எழுதியவர்கள், பாடத்திட்டத்தை தாண்டி கேள்விகள் கேட்கப்பட்டதாக குற்றம்சாட்டினர்.

மறுதேர்வு நடத்தப்படுவது மட்டுமே இதற்கு தீர்வாகும் எனவும் தேர்வெழுதியவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வு விவகாரத்தில், தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற கேள்விக்குறி தேர்வு எழுதியவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Post Top Ad