மின் வாரிய எழுத்துதேர்வு: எதிர்பார்ப்பில் இன்ஜி., பட்டதாரிகள்
மின் வாரியம், 400 உதவி பொறியாளர்களைநியமனம் செய்வதற்கான, எழுத்து தேர்வு அறிவிப்பை, எப்போது வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு, இன்ஜினியரிங் பட்டதாரிகளிடம் எழுந்து உள்ளது.
தமிழக மின் வாரியத்தில், பொறியாளர், இளநிலை உதவியாளர், கள உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில், காலி பணியிடங்கள் எண்ணிக்கை, 50 ஆயிரத்தை எட்டியுள்ளது. மின் உற்பத்தி, மின் வினியோகம் என, மின்சாரம் தொடர்பான அனைத்து பணிகளும், பொறியாளர்கள் தலைமையில் தான் நடக்கின்றன. அந்த பதவியிலும், அதிக பணியிடங்கள், காலியாக இருப்பதால், முக்கிய பணிகள் பாதிக்கின்றன.இந்நிலையில், 'மின் வாரியத்தில், 400 உதவி பொறியாளர்கள் நியமிக்கப்படுவர்' என, சட்டசபையில், முதல்வர், இ.பி.எஸ்., ஜூலை, 8ல் அறிவித்தார். இதுவரை, மின் வாரியம், அதற்கான தேர்வு அறிவிப்பை வெளியிடாமல் உள்ளது.இது குறித்து, பட்டதாரிகள் கூறியதாவது:வங்கியில் கல்வி கடன் வாங்கி, பலரும் இன்ஜினியரிங் படிப்பை முடித்துள்ளனர். அவர்கள், படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால், வங்கி கடனை அடைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மின் வாரியம், எழுத்து தேர்வு நடத்தி, அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு, அரசு இட ஒதுக்கீடு அடிப்படையில், வேலை வழங்குகிறது.அதில், காலதாமதம் ஏற்பட வாய்ப்பில்லை. எனவே, உதவி பொறியாளர் எழுத்து தேர்வு அறிவிப்பை, விரைவாக வெளியிட்டு, வட கிழக்கு பருவ மழை துவங்கும் முன், ஆட்களை தேர்வு செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.