ஏடிஎம் சேவையில் புதிய மாற்றம் : ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு
மும்பை : தொழில்நுட்பக் காரணங்களால் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க முடியாதபோது, அதனை இலவச பரிவர்த்தனைக்கான எண்ணிக்கையில் சேர்க்கக் கூடாது என்று வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம்-களில் மாதந்தோறும் 5 முறையும், மற்ற வங்கி ஏடிஎம்-களில் மூன்று முறையும் கட்டணமில்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்துள்ளது.இந்த வரம்பைத் தாண்டி பணம் எடுக்கப்படும்போது, அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 5 பரிமாற்றத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் தோல்வி அடைந்த பரிமாற்றம், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லாமல் இருக்கும் போது செய்யப்படும் பரிமாற்றம் என அனைத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்நிலையில் தற்போது இத்தகைய தோல்வி அடைந்த பரிமாற்றங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் தோல்வி அடைந்த பரிமாற்றத்திற்கு வங்கிகள் பணம் வசூலிக்கக் கூடாது என்றும் வணிக வங்கிகளுக்கு எழுத்துப்பூர்வமான அறிக்கையைக் கொடுத்துள்ளது. இதனால் மக்கள் இனி வரும் காலத்தில் கொடுக்கப்படும் இலவசமான 5 பரிமாற்றத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியும்.
தோல்வி பரிமாற்றங்கள் வன்பொருள், மென்பொருள், இண்டர்நெட் பிரச்சனை, பணம் இல்லாமல் இருப்பது, ரத்துச் செய்யப்பட்ட பரிமாற்றம் (வங்கி தரப்பு மற்றும் வாடிக்கையாளர் தரப்பு), தவறான கடவுச்சொல் பதிவிடுதல் என அனைத்து வகையான தோல்வி அடைந்த பரிமாற்றங்கள் இனி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. பணம் பரிமாற்றம் அல்லாத சேவை இதுமட்டும் அல்லாமல் பணம் பரிமாற்றம் அல்லாத பேலென்ஸ் தெரிந்துகொள்ளுதல், செக் புக் ரெக்வெஷ்ட், வரி செலுத்துதல் ஆகியவையும் இலவசமாகச் செய்துகொள்ளலாம். இதுவும் 5 இலவச பரிமாற்றத்தில் சேர்க்கப்படாது.