விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு இலவச புத்தகப்பை டெண்டருக்கு தடை: அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, August 15, 2019

விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு இலவச புத்தகப்பை டெண்டருக்கு தடை: அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு இலவச புத்தகப்பை டெண்டருக்கு தடை: அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான புத்தக பைகள் மற்றும் காலணிகள் கொள்முதலுக்கான டெண்டரை திறக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச புத்தகப்பை மற்றும் காலணிகள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரி தமிழ்நாடு பாடநூல் கழகம் கடந்த மார்ச் மாதம் தனித்தனியாக  அறிவிப்பாணை வெளியிட்டது. டெண்டர் நிபந்தனைகள் படி  பெரிய, நடுத்தர, சிறிய என மூன்று அளவுகளில் மாதிரிகளை சமர்பிக்க வேண்டும் என்றும் அந்த மாதிரிகளில் எந்தவொரு குறியீடும் இடம்பெற கூடாது என்றும் நிபந்தனைகள் விடுக்கப்பட்டுள்ளன.  இந்த நிலையில் புதுடெல்லியை சேர்ந்த மன்ஜீத் பிளாஸ்டிக் பை தொழிற்சாலை மற்றும் அரியானாவை சேர்ந்த டைமண்ட் புட்கேர் உத்யோக் நிறுவனம் ஆகியவை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. மன்ஜீத் பிளாஸ்டிக் பை தொழிற்சாலை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், புத்தகப் பைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் டெண்டருக்காக அனுப்பப்படும் மாதிரி  பைகளில் எந்த குறியீட்டையும் அச்சிடக் கூடாது. இதுதான் டெண்டர் நிபந்தனை.   ஆனால், டெண்டரில் கலந்துகொள்ள விண்ணப்பித்த 9 நிறுவனங்கள் டெண்டர் நிபந்தனையை மீறி மாதிரி பைகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் படங்களை அச்சடித்துள்ளனர்.

 விதிமுறைகளை மீறி இந்த நிறுவனங்களின் டெண்டர் விண்ணப்பங்களை அரசு ஏற்றக்கொண்டுள்ளது. இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. எனவே, இந்த டெண்டரை இறுதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்.  டெண்டரில் இருந்த அந்த நிறுவனங்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும் எனக்கோரி அரசுக்கு கடந்த மாதம் 9ம் தேதி மனு அனுப்பினோம். எந்த பதிலும் வரவில்லை. எனவே, இதுபோன்ற விதி மீறல் டெண்டர் படிவங்களை தகுதி நீக்கம் ெசய்து உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதேபோல், காலணி டெண்டரில் பங்கேற்ற அரியானாவை சேர்ந்த டைமண்ட் புட்கேர் உத்யோக் நிறுவனமும், நிபந்தனைகளை மீறிய பல நிறுவனங்கள் ஒரே மாதிரியான காலணிகளை மாதிரிகளாக வழங்கியுள்ளன. எனவே, இந்த நிறுவனங்களின் டெண்டர் படிவங்களை நிராகரிக்கக் கோரி அரசுக்கு மனு அனுப்பினோம். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மனுவில் கூறியுள்ளது.  இந்த இரு வழக்குகளும்  நீதிபதி ஆதிகேசவலு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது, புத்தக பைகளுக்கான டெண்டருடன் சமர்ப்பிக்கபட்ட மாதிரி பைகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படம் பொறிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் மீண்டும் மாதிரிகளை சமர்ப்பிக்கும்படி தமிழ்நாடு பாடநூல் கழகம் அறிவுறுத்தியுள்ளது. இது டெண்டர் விதிமுறைகளுக்கும், நிபந்தனைக்கும் எதிரானது.

 காலணி டெண்டரை பொறுத்தவரை, பல நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து ஒரே மாதிரியான காலணி மாதிரிகளை சமர்ப்பித்துள்ளன. இதில், முறைகேடு நடந்துள்ளது.  எனவே, காலணி கொள்முதலுக்கான டெண்டரை இறுதி செய்ய வேண்டும். அந்த நிறுவனங்களுக்கு டெண்டரை வழங்க தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.  இந்த வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதி ஆதிகேசவலு, புத்தகப்பை மற்றும் காலணி கொள்முதலுக்கான டெண்டரை திறக்க கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

  மேலும், காலணி மாதிரிகள் எந்த ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்படும்  என்ற விவரத்தை அறிக்கையாக, மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

* இலவச புத்தகப்பை மற்றும் காலணிகள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரி தமிழ்நாடு பாடநூல் கழகம் கடந்த மார்ச் மாதம் தனித்தனியாக  அறிவிப்பாணை வெளியிட்டது.

* டெண்டருக்காக அனுப்பப்படும் மாதிரி  பைகளில் எந்த குறியீட்டையும் அச்சிடக் கூடாது. இதுதான் டெண்டர் நிபந்தனை.

* டெண்டர் நிபந்தனையை மீறி மாதிரி பைகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் படங்களை அச்சடித்துள்ளனர்.

Post Top Ad