மருத்துவ கவுன்சலிங்கில் பங்கேற்ற வெளிமாநில மாணவர்கள் 126 பேருக்கு நோட்டீஸ்
புதுக்கோட்டையைச் சேர்ந்த சோம்நாத், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:தமிழக மருத்துவக் கல்லூரிகளில் 85 சதவீத இடங்கள் தமிழக மாணவர்களுக்கும், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிலும் நிரப்பப்படும். எனது மகன் நீட் தேர்வில் 93.7 சதவீத மதிப்பெண் பெற்றார்.
இதன்மூலம் அரசு அல்லது தனியார் மருத்துவக்கல்லூரியில் சீட் கிடைப்பது உறுதியானது. அரசு மருத்துவக்கல்லூரிகளில் 2,744 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 126 இடங்களுக்கு வெளிமாநில மாணவர்களும் கவுன்சலிங்கில் பங்கேற்றுள்ளனர். இந்த இடங்களுக்கு தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களைக் ெகாண்டே நிரப்ப வேண்டும். ஆனால், இதுகுறித்து மாணவர் சேர்க்கைக்கான குறிப்பேட்டில் எதுவும் குறிப்பிடவில்லை. இதனால் வெளிமாநிலத்தவர் அதிகளவு சீட் பெறுவர். இவர்களுக்கு சீட் ஒதுக்குவதால் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை.
எனவே, இதன் அடிப்படையில் நடக்கும் கவுன்சலிங்கிற்கு தடை விதிக்க வேண்டும். கவுன்சலிங்கை ரத்து செய்து, தமிழக மாணவர்கள் பங்கேற்கும் வகையில் புதிதாக பட்டியல் வெளியிட்டு கவுன்சலிங் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், கவுன்சலிங் பட்டியலில் இடம் பெற்றுள்ள வெளிமாநில மாணவர்கள் 126 பேரையும் தாமாக முன்வந்து வழக்கில் ஒரு தரப்பாக சேர்த்தார். இவர்களுக்கு ேநாட்டீஸ் அனுப்பவும், இவர்கள் எதன் அடிப்படையில் கவுன்சலிங்கில் பங்கேற்றனர்? அவர்களின் இருப்பிட சான்று குறித்து விளக்கமளிக்கவும் உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை ஆக. 26க்கு தள்ளி வைத்தார்.