புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்: கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்


 1344034

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் கல்லூரி மாணவர்களை தன்னார்வ ஆசிரியர்களாக பங்கேற்க உயர்கல்வி நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டுமென யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி பல்கலை. கல்லூரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், "நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களைக் கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசால் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-ம்ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் 2027-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்று எழுதப் படிக்க தெரியாத நபர்களுக்கு கணித அறிவு, தொழிற்கல்வி, வாழ்வியல் திறன் போன்றவை குறித்து பயிற்சி அளித்து வருகின்றனர். இதற்காக நாடு முழுவதும் கற்போர் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்துக்காக பிரத்யேகமாக செல்போன் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களை புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் தன்னார்வ ஆசிரியர்களாக பங்கேற்கவும், அதன் மூலம் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவை கற்பிக்கவும் ஊக்கப்படுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive