சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பள்ளிக்கல்வி வழங்கப்படும்: மோடி


 நாடு முழுதும் 85 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினருக்கும் பள்ளிக் கல்வியை வழங்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஒப்புதல்


நாடு முழுதும் மத்திய அரசால் நடத்தப்படும் 85 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்கவும், ஏற்கனவே இருக்கும் பள்ளிகளின் நிலையை மேம்படுத்தவும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அடுத்த எட்டு ஆண்டுகளில் இந்த பணிகளை முடிக்க, 5,872.08 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, தன் சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:


பள்ளிக்கல்வியை அனைத்து சமூகத்தினரும் எளிதில் அணுகக்கூடிய வகையில், மிகப்பெரிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. அதன்படி, நாடு முழுதும் 85 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் திறக்கப்படும். இதனால், ஏராளமான மாணவர்கள் பயனடைவர். இதன் வாயிலாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

தேசிய கல்விக் கொள்கையின்படி, நம் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பள்ளிக்கல்வியை அளிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக, நாடு முழுதும் 28 நவோதயா பள்ளிகளை துவங்கவும் நம் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இது உறைவிடப் பள்ளி மற்றும் தரமான பள்ளிக்கல்வியை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தரமான கல்வி புதிய கேந்திரிய வித்யாலயா திறப்பு குறித்து அரசு வெளியிட்டுள்ள குறிப்பில், நாடு முழுதும் திறக்கப்படவுள்ள புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் வாயிலாக 82,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு குறைந்த செலவில், தரமான கல்வி வழங்கப்படும்.

தற்போது நாட்டில் 1,256 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், மாஸ்கோ, காத்மாண்டு, டெஹ்ரான் என மூன்று பள்ளிகள் வெளிநாட்டு நகரங்களில் உள்ளன. இங்கு 13.56 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive