அங்கன்வாடி மையங்களில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த மார்ச் 24-ம் தேதிமுதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டன. இருப்பினும், சத்துமாவு உள்ளிட்ட ஊட்டச்சத்தான உணவுகள் குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று பெற்றோரிடம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும்,வாட்ஸ்-அப் மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது.
இந்நிலையில், அங்கன்வாடி மையங்களில் நடப்பு கல்விஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில், அங்கன்வாடி பணியாளர்கள் வீடுகள்தோறும் சென்று குழந்தைகளை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அங்கன்வாடி மையங்களில் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. அங்கன்வாடி மையங்களில்சேர விரும்பும் குழந்தைகளின் பெற்றோர், அங்கன்வாடி பணியாளர்களை தொடர்பு கொள்ள வேண்டும். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைதானா என்பதை அங்கன்வாடி பணியாளர்கள் உறுதி செய்து, தங்களது ஸ்மார்ட் போனில் விவரங்களை பதிவேற்றம் செய்தால் மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்பட்டுவிடும்.
புதிதாக சேரும் குழந்தைகளுக்கும் நேரடியாக வீடுகளுக்கு சென்றுஅரிசி, பருப்பு, முட்டை, சத்துமாவு உள்ளிட்ட ஊட்டச்சத்தான உணவுகள் தொடர்ந்து வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment