மாநகராட்சி தொடக்கப்பள்ளி சுவரில் மெட்ரோ ரெயில் ஓவியம்- மாணவர்களை கவர ஆசிரியர்கள் நடவடிக்கை


திருவொற்றியூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி சுவரில் மெட்ரோ ரெயில் ஓவியம் வரையப்பட்டு உள்ளது. மாணவர்களை கவர ஆசிரியர்கள் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளனர்.

திருவொற்றியூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி சுவரில் வரையப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் ஓவியத்தை படத்தில் காணலாம்.
திருவொற்றியூர்:

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட அன்னை சிவகாமி நகரில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி கற்பிக்கும் இப்பள்ளியில் 300 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் எண்ணூரில் அனல்மின் நிலையம் அமைக்கும் பணிக்கு தேவையான ராட்சத பிளாஸ்டிக் குழாய்கள் இந்த பள்ளி அருகே வைக்கப்பட்டிருந்தது. அது மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்ததால் பள்ளியின் முகப்பு முழுவதும் எரிந்து நாசமானது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் பள்ளி கட்டிடம் பழுது பார்த்து புதுப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் மாணவர்களை கவரும் விதமாக பள்ளியை அழகுபடுத்த திட்டமிட்டனர். இதற்காக பள்ளி மாணவர்களின் பெற்றோர் மற்றும் நன்கொடையாளர்கள் உதவியுடன் மாநகராட்சி தொடக்கப்பள்ளி சுவரில் மெட்ரோ ரெயில் போன்று ஓவியம் வரைந்துள்ளனர்.

அதன்படி பள்ளி அலுவலக அறை மெட்ரோ ரெயில் நிலையம் போன்ற தோற்றத்துடனும், 5 வகுப்பறைகளிலும் 5 மெட்ரோ ரெயில் பெட்டிகள் போன்றும், வகுப்பறை வாசல்கள் மெட்ரோ ரெயில் பெட்டியின் நுழைவு வாசல்கள் போன்ற தோற்றத்துடனும் தத்துரூபமாக வண்ணம் தீட்டி உள்ளனர். இது பார்க்க மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து மெட்ரோ ரெயில் வெளியே வருவதுபோன்று காட்சி அளிக்கிறது.

இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். அதேபோல் 300 மாணவர்கள் படிக்கும் பள்ளியில் 4 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.

எனவே கூடுதலாக மாணவர்களை சேர்க்கவும், அவர்களுக்கு நல்ல முறையில் பாடங்களை கற்றுத்தரவும் கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive