"நண்பர்களிடமோ உறவினர்களிடமோ முதியோர் அதிகம் பகிர்ந்து கொள்வதில்லை. அப்படி அவர்கள் பகிர்ந்து கொண்டால் அவர்களின் மீதான துன்புறுத்தல்கள், வன்கொடுமைகள் அதிகமாகும் என்பதால் இதை வெளியில் சொல்வதில்லை."
சித்தார்த்தரை புத்தராக்கிய மூப்பு, பிணி, சாக்காடு எனும் முன்று அம்சங்களையும் மனிதராகப் பிறந்த யாவரும் கடந்தே தீர வேண்டியிருக்கிறது. அதிலும் மூப்பு எனப்படும் முதுமையை எவரும் தள்ளிப் போடவே முடியாது, அனுபவித்துத் தான் தீர வேண்டும். ஆனால், ''கடந்த 50 ஆண்டுகளில் முதியோர்கள் குறித்த மனித மதிப்பீடுகள் நிறையவே மாறியிருக்கின்றன. புலம் பெயர்ந்த வாழ்க்கை, கூட்டுக் குடும்பங்களின் சிதைவு எனப் பெற்றோர்களே பிள்ளைகளுக்குச் சுமையாகிப் போன நிலையைப் பார்க்க முடிகிறது'' என்கிறார் முதியோர்நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன்.
வெளியில் அதிகம் தெரிவதில்லை.
நண்பர்களிடமோ உறவினர்களிடமோ முதியோர் அதிகம் பகிர்ந்து கொள்வதில்லை. அப்படி அவர்கள் பகிர்ந்து கொண்டால் அவர்களின் மீதான துன்புறுத்தல்கள், வன்கொடுமைகள் அதிகமாகும் என்பதால் இதை வெளியில் சொல்வதில்லை. தங்களின் குடும்ப கௌரவம் பாதிக்கும் என்பதாலும், அவர்கள் வெளியில் சொல்வதில்லை.
இளைஞர்களின் மனப்பாங்கு இப்போது ஏன் இப்படி மாறிப் போனது என்பது அறிய முடியாத ஒன்றாகத் தான் இருந்து வருகிறது. நகரம் சார்ந்த வாழ்க்கை முறை, சொந்த ஊரிலிருந்து புலம் பெயர்ந்து சென்ற ஒரு நிலை, கூட்டுக் குடும்பங்களின் சிதைவு ஆகியவை இதற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் முதியவர்களை கடவுளாகப் பார்த்தார்கள். அந்த அளவு அவர்களின் வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள். ஆனால், இப்போது காலப்போக்கில் வயதானவர், பெரியவர், பெருசு, கிழம் என்ற ரீதியில் அவர்களின் மீதான மரியாதை தேய்ந்து போய் விட்டது. 'வயதானவர், அந்த மனுஷன், பெருசு' என்றெல்லாம் அவர்களைச் செல்லமாக அழைப்பது போல அவர்களின் மதிப்பையும் மரியாதையையும் சீரழித்து விட்டனர்.
இதற்கு 'தலைமுறை இடைவெளி' ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. இளையதலைமுறைக்கு இரண்டு விஷயங்கள் தான் இப்போது தேவைப்படுகின்றன. ஒன்று பணம், இன்னொன்று படிப்பு. படிப்பு என்றால், கல்வி என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அறிவு என்று எடுத்துக் கொள்ளலாம். அது புத்தக அறிவாக இருந்தாலும் சரி, அனுபவ அறிவாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு சோஷியல் மீடியாவே தேவையான விஷயங்களை வழங்கி வருவதால், பெரியோர்களின் மீதான மதிப்பு இன்றைய இளைய தலைமுறையினருக்குக் குறைந்து போய் விட்டது.
கை நிறைய கிடைக்கும் சம்பளம், அவர்கள் படித்த படிப்புக்கான ஒரு வேலையால் கிடைத்து விடுகிறது. அவர்கள், பெரியவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விட்டது. நகரம் சார்ந்த வாழ்க்கை முறை அடுத்த காரணம்.
சொந்த ஊரிலிருந்து புலம்பெயர்ந்து அருகிலுள்ள நகருக்குச் சென்று வாழும் நிலை, மேற்கத்திய கலாசாரம், பழக்கவழக்கங்கள், கூட்டுக் குடும்பங்களில் சிதைவு இவையெல்லாம் முதியோர் கொடுமைப்படுத்தப்படுவதற்குக் காரணங்களாக அமைகின்றன.
பயன்படுத்தி விட்டு வீசி எறிதல் எனும் யூஸ் அண்ட் த்ரோ கலாசாரம் இளைஞர்களிடையே பெருவாரியாக வந்து விட்டது. அதனால் பெரியோர்களின் மீது மதிப்பும் மரியாதையும் போய் விட்டது.
முதியோர் கொடுமை என்பதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று உடலளவில் அவர்களைத் துன்புறுத்துவது; மற்றொன்று மனதளவில் அவர்களைத் துன்புறுத்துவது.
வெளியில், கூட்டுக் குடும்பம் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். வீட்டில் சென்று பார்த்தால், அப்பா அம்மாவுக்கு கார் ஷெட்டில் ஓர் இடம் ஒதுக்கிக் கட்டில் போட்டுக் கொடுத்திருப்பார்கள்.
நேரத்துக்கு உணவு கூடத் தர மாட்டார்கள். விருந்தினர்கள் வந்தால், அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க மாட்டார்கள். பேரப்பிள்ளைகளை அவர்களுடன் பழகுவதற்கு அனுமதிக்க மாட்டார்கள். இப்படி நிறைய விஷயங்களில் அவர்களைப் புறக்கணிப்பார்கள்.
என்னிடம் முதியோர்களை அழைத்து வரும் போது, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் தனித்தனியாக இருவேறு விதமாக கவுன்சிலிங் கொடுப்பேன். 'அவர் தன்னைத் தனிமையாக உணர்கிறார். உணர வாய்ப்பு இருக்கிறது. அதனால் நீங்கள் அவரிடம் மனம் விட்டுப் பேசுங்கள்' என்று கூறி அனுப்புவேன்.
பொதுவாக முதியவர்களிடம் பேசுவதைக் குடும்பத்தினர் தவிர்க்கிறார்கள். மாமியார், மருமகள் ஒருவருக்கொருவர் பிடித்தம் இல்லாமல் இருப்பது, ஜாடைமாடையாக வார்த்தைகளால் கடிந்து கொள்வது, பிள்ளைகளைத் திட்டுவது போல் பெரியவர்களைத் திட்டுவது... இவையெல்லாம் ஒருவிதக் கொடுமை தான்.
சொத்து அதிகம் இருந்தாலும் பிரச்னை, சொத்து இல்லாமல் இருந்தாலும் பிரச்னை. சொத்து அதிகம் இருந்தால், 'இந்த இடத்தை எனக்கு எழுதிக் கொடு, அந்த இடத்தை அவனுக்கு விட்டுவிடு' என்று மற்றவர்களை விடக் கூடுதலாகத் தனக்கு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிள்ளைகள், பெற்றோர்களைச் சமமான பங்கீடு செய்ய விடாமல் துன்புறுத்துவார்கள்.
சொத்து தான் அவர்களுக்கு பலத்தையும் மரியாதையையும் தந்து கொண்டிருக்கும். ஆனால், 'அதை இப்போதே எனக்கு எழுதிக் கொடுத்து விடு' என்று கேட்டுத் துன்புறுத்துவார்கள். சில இடங்களில் இதில் மகனுக்கும் மகளுக்குமான 'பஞ்சாயத்து' பெரிய அளவில் ஓடிக் கொண்டிருக்கும்.
நம் நாட்டைப் பொறுத்தளவில் மகளுக்கு சீர்வரிசை செய்தால் போதுமானது என்ற அளவில் குடும்பங்கள் தங்கள் கடமை முடிந்ததாக நினைக்கின்றனர். ஆனால், பெரும் சொத்து உள்ள இடங்களில் சமமான பங்கு கிடைக்கா விட்டால், மகள்களும் தங்கள் தாய், தந்தையரைப் புறக்கணிப்பவர்களாக இருக்கிறார்கள்.
அடித்துத் துன்புறுத்துவது... இது பொதுவாக அதிகம் நடப்பதில்லை. ஆனால், பார்கின்சன்ஸ், டிமென்ஷியா போன்ற நோய்களால் முதியோர்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் போது அவர்களை அடித்துத் துன்புறுத்துவது சில இடங்களில் நடக்கவே செய்கின்றது.
இதை டாக்டரிடம் வரும் போது கூட அவர்கள் சொல்ல மாட்டார்கள். ஆனால், டாக்டர்களாகிய நாங்கள், இவர்கள் கீழே விழுந்ததால் இந்த அடி ஏற்பட்டதா, இல்லை எவரும் துன்புறுத்தியதால் இந்தக் காயம் ஏற்பட்டதா என்பதை மிக எளிதாகக் கண்டுபிடித்து விடுவோம்.
பெரும்பாலும் முதியோர்களில் அதிகக் கொடுமைக்குள்ளாகிறவர்கள் யார் என்று பார்த்தால், எந்தச் சொத்தும், பணமும் இல்லாமல் முழுக்க முழுக்க இளைய தலைமுறையைச் சார்ந்து இருப்பவர்களே அதிகம் துன்பத்துக்கு ஆளாகின்றனர். நாள்பட்ட நோயாளிகள், படுத்த படுக்கையில் இருப்பவர்கள் இதுபோன்ற துன்பத்துக்கு ஆளாகின்றனர்.
முதியோர்களை இளைஞர்கள் இப்படி நடத்துவதற்கு என்ன காரணம் என்பதையும் பார்க்க வேண்டும். சிலருக்குப் போதுமான படிப்பு, வருமானம், தொழில் அமையாத போது அவர்களுக்குத் தங்களின் பெற்றோர் மீது ஒரு கோபம் ஏற்படுகிறது. சிகரெட், மது போன்ற போதைப் பழக்கங்களுக்கு அடிமையானவர்கள், நல்ல நண்பர்கள், நல்ல சூழல் அமையப் பெறாதவர்களுக்குப் பெற்றோர் மீது ஒரு கோபம் இருக்கிறது.
'ஹெல்ப் ஏஜ் இந்தியா' சமீபத்தில் இந்தியா முழுவதும் 23 நகரங்களில் 5,014 முதியவர்களிடம் சர்வே நடத்திப் பேட்டி கண்டிருக்கிறார்கள். அதன்படி, நான்கில் ஒரு பகுதி முதியோர் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இவர்களில் 52 சதவிகிதத்தினர் தங்களின் மகன்களால் துன்பப்படுகின்றனர். மருமகளால் அவஸ்தைப்படுகிறவர்கள் 34 சதவிகிதத்தினர். 82 சதவிகித முதியோர் குடும்ப கௌரவம் கருதி தாங்கள் துன்பப்படுவதை வெளியில் சொல்வதில்லை. மேலும், பொதுவெளியில் அப்படிச் சொல்வதால் தங்களுக்கு நேர வாய்ப்புள்ள கொடுமைகள் அதிகம் என்பதாலும் அவர்கள் சொல்வதில்லை.
என்ன தான் தீர்வு..?
முதியோர்களுக்கும் இளைஞர்களுக்கும் தனித்தனியாக வேறு வேறு மாதிரியான கவுன்சலிங்கை நாம் தரலாம்.
முதியோர்களிடம், 'நீங்கள் கூடுமானவரை அவர்களைச் சார்ந்திருக்காமல் உங்களுடைய தேவைகளை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளும் விதமாக நடந்து கொள்ள வேண்டும்' என அறிவுறுத்தலாம். இளைஞர்களிடம், 'எவ்வளவு வேலைகள் இருந்தாலும் நீங்கள் அவர்களிடம் ஒரு வார்த்தை பேசுவது மிகவும் சிறந்தது. சாப்பிட்டீர்களா, மருந்து எடுத்துக் கொண்டீர்களா என்று கேட்பது அவர்களுக்கு ஆறுதல் தரும். இன்று நீ உன் பெற்றோரை எப்படி கவனித்துக் கொள்கிறாயோ அதை வைத்துத் தான் நாளை உன்னை உன் பிள்ளைகள் கவனித்துக் கொள்வார்கள்' என்பதை அறிவுறுத்தலாம்.
முதியோர் துறுதுறுவெனப் பேசிக்கொண்டிருப்பதைத் தவிர்ப்பது நல்லது. முடிந்தவரை இளையோரைச் சார்ந்திருக்காமல் தனித்து தங்களுக்கு உரியவற்றைச் செய்து கொள்ள வேண்டும். பரிதாபத்திற்குரியவர்களாகத் தங்களைக் காண்பித்துக் கொண்டு கழிவிரக்கம் பெற ஆசைப்படக் கூடாது. அது அவர்களின் மீது இருக்கும் மதிப்பைக் குறைக்கவே செய்யும்.
'உனக்காக இப்படிக் கஷ்டப்பட்டு இதைச் செய்தேன், அதைச் செய்தேன்' என்று இளையதலைமுறையிடம் ஒவ்வொரு முறையும் பதிவு செய்து கொண்டிருக்கக் கூடாது. அன்பு என்பது குற்றாலம் அருவியைப் போல் மேலிருந்து கீழே வரும், கீழிருந்து மேலே வருமா என்று எதிர்பார்ப்பதை அவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும்.
பிள்ளைகளின் பிறந்த நாள், திருமண நாள், பேரப்பிள்ளைகளின் பிறந்தநாள் போன்றவற்றுக்கு முதியோர் தங்களால் இயன்ற அளவு சிறு சிறு பரிசுகள் கொடுத்து அவர்களின் அன்பைப் பெற வேண்டும். சின்னச் சின்ன பரிசுகள் பெரிய சந்தோஷங்களைக்கொண்டு வந்து சேர்க்கும்'' என்கிறார் டாக்டர் வி.எஸ்.நடராஜன்...
பகிர்வு
0 Comments:
Post a Comment