குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறுவதால் 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: தமிழகத்தில் நாளை முதல் அதி கன மழை பெய்யும் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, December 7, 2022

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறுவதால் 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: தமிழகத்தில் நாளை முதல் அதி கன மழை பெய்யும்

  

IMG_20221207_092058
வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று மாலையில் காற்றழுத்த  தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது இன்று மாலை புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, தமிழகத்தில் நாளை முதல்  அதி கனமழை பெய்யும் என்பதால், 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதையடுத்து  தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், பாதிப்பு அதிகம் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை பெய்வது கடந்த 10 நாட்களாக குறைந்திருந்தது. ஆனால், தென் மாவட்டங்களில் மட்டும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வந்தது.


இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரையில் புயல் ஏதும் உருவாகி பெரிய மழை பொழிவை தமிழகத்துக்கு கொடுக்கவில்லை. இருப்பினும் நவம்பர் மாதம் தொடர்ந்து சில நாள் பெய்த மழையால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இது சற்று ஆறுதலைக் கொடுத்தாலும், வழக்கமான வடகிழக்கு பருவமழை இன்னும் பெய்யவில்லை. மாநிலத்தின் சில இடங்களில் விவசாயத்துக்கு தேவையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான், தென் சீனக் கடல் பகுதியில் இருந்து வங்கக் கடலுக்குள் நுழைந்த காற்று, அந்தமான் அருகே காற்றழுத்தமாக உருவானது. அது தற்போது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. அதே நேரத்தில் வடஇலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தம் ஒன்று வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வந்து அந்தமான் காற்றழுத்த தாழ்வுப் பகுதியுடன் இணைந்துள்ளது.

இந்த இரு காற்றழுத்தங்களின் இணைப்பு மேலும் வலுப்பெற்று நேற்று மாலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த நிகழ்வின் காரணமாக கடலோர மாவட்டங்கள் உள்பட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இன்றும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். பொதுவாக மேகமூட்டம் காணப்படும். கடல் காற்று தரையை நோக்கி வீசும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து  இன்று மாலையில் புயலாக (மாண்டஸ்) வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது மேலும் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் நிலை கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் அநேக இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இது தவிர திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்  மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை  பெய்யும். மேலும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.


9ம் தேதி, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும். இதையடுத்து, தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தமிழக புதுவை மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் ப குதிகள் ஆகிய பகுதிகளில் 10ம் தேதி வரை 70 கிமீ முதல் 90 கிமீ வரை பலத்த காற்று வீசும். அதனால் மேற்கண்ட இடங்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


நாளை முதல் 10ம் தேதி வரை தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் உட்பட 13 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. எனவே, அந்த பகுதிகளில் வெள்ளச் சேதம் ஏற்படாமல் வடிகால்களை சரி செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை மீட்கவும், அவர்களுக்கு வேண்டிய மீட்பு பணிகளை செய்யவும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதிக மழை பெய்யும் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடவும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதிப்பு அதிகம் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

Post Top Ad