சனிப் பெயர்ச்சி பலன்கள் - மிதுனம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, December 16, 2020

சனிப் பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்


மிதுனம் (மிருகசீரிஷம்3ஆம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

வித்யாகாரகன் புதனை ராசிநாதனாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே நீங்கள் எடுத்த காரியத்தையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றும் தன்மையுள்ளவர்கள். பணப்புழக்கம் தங்களிடம் தட்டுப்பாடின்றி இருக்கும். உங்களது உழைப்பால் மற்றவர்களை வாழவைப்பீர்கள். யார் உங்களிடம் வாக்கு கொடுத்தாலும் அதன்படி அவர்கள் நடந்துகொள்ளாவிட்டால் உங்களுக்கு கோபம் வரும். ஏனென்றால் நீங்கள் தன்மானம் நிறைந்தவர்கள். எந்த சூழ்நிலையிலும் அடுத்தவர் மனம் புண்படாதபடி பேசுவதில் வல்லவர் நீங்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த சனிப்பெயர்ச்சி




கிரகநிலை:

உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சனி பகவான், தற்பொழுது அஷ்டம ஆயுள் ஸ்தானமான மகர ராசிக்கு மாறுகிறார். இப்படி மாறக்கூடிய சனி பகவான் தனது மூன்றாம் பார்வையாக உங்களுடைய தொழில் ஸ்தானம் - ஏழாம் பார்வை உங்களுடைய தன வாக்கு குடும்ப ஸ்தானம் - பத்தாம் பார்வையாக உங்களுடைய பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

மற்ற கிரகங்களின் கிரகநிலை:

குரு பகவான் அஷ்டம ஸ்தானமான மகர ராசியில் இருக்கிறார். ராகு பகவான் அயன சயன போக விரைய ஸ்தானத்திலும் - கேது பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.

இந்த சனிப் பெயர்ச்சியால் உங்களின் பொருளாதார நிலை மேம்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். பொது நலக் காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் கைகூடும்.

குழந்தை இல்லாதோர்க்கு மழலைச் செல்வம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் வருமானமும் பெருகும். உங்கள் செயல்களை நேர்மையான பாதையில் செவ்வனே செய்து முடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். பங்குச் சந்தை முதலீடு போன்ற இனங்கள் மூலம் திடீர் பண வரவு உண்டாகும்.

குல தெய்வ வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமல் பணிகள் கசக்கிப் பிழியக் கூடும். இதனால் உடலில் அவ்வப்போது சோர்வு உண்டாகும். தனித்து நின்று போட்டிகளைச் சமாளிக்க வேண்டிவரும். கடினமான காரியங்களையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பீர்கள்.

உங்களின் உடல் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி பெறுவீர்கள். உங்கள் நடையில் ஒரு மிடுக்கு உண்டாகும். வசிக்கும் வீட்டை பழுது பார்ப்பதற்குச் சிறிது செலவு செய்ய நேரிடும். மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் அவற்றை சாதுர்யமாகச் சமாளிக்க சனி பகவான் உதவுவார். சிலர் புதிய இல்லங்களுக்கு மாறுவார்கள்.

உங்களுக்கு பேராற்றல் உண்டாகும். புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். சாமர்த்தியசாலி என்று பெயர் எடுப்பீர்கள். உற்றார், உறவினர்கள் உங்களுக்கு உதவிகரமாக நடந்து கொள்வார்கள். நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். இதனால் மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள்.

உத்யோகஸ்தர்கள் கடின உழைப்பைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றவும். சுணக்கத்திற்கும் சோம்பலுக்கும் இடம் கொடுக்காமல் பணியாற்றினால் மேலதிகாரிகளின் ஆதரவை எளிதில் பெறலாம். இல்லையேல் கிடுக்கிப்பிடிதான்! எப்போதும் நிதானமாகவே பேசி சக ஊழியர்களின் அன்பைப் பெறவும். இதற்குப் பயனும் உண்டு. உங்கள் உடல் உழைப்பிற்கு மேல் இரு மடங்கு வருமானத்தைக் காண்பீர்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்; பயணங்களும் பலன் தரும்.

வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடைந்தாலும் உங்கள் செயல்களில் கூடுதல் அக்கறை காட்டவும். மற்றபடி சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். புதிய சந்தைகளைத் தேடிச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய முதலீடுகளையும் துணிந்து செய்யலாம்.

அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள். தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். கட்சிப் பிரச்சாரங்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். அதேசமயம் எவரையும் குறைத்து மதிப்பிடாமல் செயலாற்றவும்.

கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். பண வரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். அமைதியாகச் செயலாற்றுவீர்கள். சில விரயங்களும் அவ்வப்போது உண்டாகும் என்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.

பெண்மணிகளுக்குக் கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதே சமயம் குடும்பத்தில் உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் நடந்து கொண்டு அமைதி காப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

மாணவமணிகள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்பு உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பாராட்டைப் பெறுவீர்கள். உடற்பயிற்சிகளை மேற்கொண்டு சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பெற்றோர்களின் அறிவுரைப்படி நடந்துகொண்டு மேலும் சிறப்படையுங்கள்.

மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்:

இந்த சனிப் பெயர்ச்சியால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணம் சேரும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

திருவாதிரை:

இந்த சனிப் பெயர்ச்சியால் ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்:

இந்த சனிப் பெயர்ச்சியால் எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தென்மேற்கு
அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, பச்சை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பரிகாரம்: புதன்கிழமைதோறும் ஐயப்பன் ஆலயத்திற்குச் சென்று கருடாழ்வாரை வழிபட குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதாரத்தில் மாற்றம் உண்டாகும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: "ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், புதன், சுக்கிரன்

ஆக்கம்: ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் 

Post Top Ad