கொரோனாவும் ஆசிரியர்களும்
உண்மையில் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பல மாநிலங்களுக்கு முன்னுதாரனமாய்த் திகழ்கிறது. தமிழக சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கையாகவே பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்த இடத்தில் நம் பணி என்ன? நாம் நம் பள்ளி அமைந்துள்ள சமூகத்தில் ஓர் அங்கம். அதன் வளர்ச்சி, வீழ்ச்சி இரண்டிலும் நம் பங்கு இருப்பதை யாராவது மறுக்கவியலுமா?
ஆசிரியர்கள் மட்டுமே சமூகத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவர்கள். எனவே அந்த நெருக்கத்தை இன்னும் அதிகப்படுத்திக்கொள்ள இந்த விடுமுறையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அரசாங்கம் சொன்னால் மட்டும்தான் விழிப்புணர்வுப் பணியைச் செய்ய வேண்டுமா?
நேற்றிலிருந்து எனக்கு பெற்றோர்களிடமிருந்து பல அழைப்புகள்; சிலரை நானே அழைத்து மாணவர்களைப் பற்றி நலம் விசாரிக்கிறேன்.
கொரோனா பற்றிய அச்சமோ, விழிப்புணர்வோ அற்ற பெற்றோர்கள் குலதெய்வம் கோவிலுக்கு, திருப்பதிக்கு, சமயபுரம், பழனி என்ற வேண்டுதலை எல்லாம் விடுமுறையிலேயே நிறைவேற்றிவிட வேண்டுமெனத் துடிக்கிறார்கள். இப்பொழுதுது தான் சாமியை காத்தாட தரிசிக்க முடியுமாம்..வேறு சிலரோ தலைவலித்தாலும் கொரோனாவா என அஞ்சுகிறார்கள். சோப்பால வைரஸ் அழிஞ்சுபோகும்னா சோப்புத்தண்ணிய கரைச்சி குடிக்கலாமில்ல டீச்சர் எனக் அப்பிராணியாய்க் கேட்கிறது ஒரு பாவப்பட்ட ஜீவன்..
நல்லது செய்வதாக எண்ணும் வாட்சாப் வாயர்கள், வசந்தி புருஷர்களால் கொரோனா பீதியாய் முன்னமே பரவிக்கிடக்கிறது.
ஆசிரியர்கள் படித்தவர்கள் ஓரளவு இதைப்பற்றிய விழிப்புணர்வு உள்ளவர்கள் சூழலை சமாளிக்கும் ஆற்றலுள்ளவர்கள். ஆனால், படிக்காத பெற்றோர்கள் ? அவர்களுக்கு யார்தான் சொல்வது?
ஆசிரியர்களுக்கும் விடுமுறை விடவேண்டும் எனவும்ஆசிரியர்களை தொற்று பற்றாதா எனவும் கேட்டால், இது எவ்வளவு பெரிய சுயநலம்? சுகாதாரத்துறை ஊழியர்களை நினைத்துப்பாருங்கள். அவர்கள் ஏன் இதைச் செய்யவேண்டும்.? நமக்காகவும் தானே?
இதைப் பேரிடராக எடுர்துக்கொண்டு இந்த நேரத்தில் இதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் உள்ளனர். இது நம் தார்மீகப் பொறுப்பும் கூட
இந்த விடுமுறையில் சுகாதாரத்துறையுடன் இணைந்து நாம் ஏன் பணியாற்றக்கூடாது. வகுப்பறையை விட்டு ஏன் மாணவர்களின் வீடு நோக்கி செல்லக்கூடாது? அவர்கள் நம் மாணவர்கள் இல்லையா?
போதுமான பாதுகாப்புடன், எச்சரிக்கைகளை எடுத்துச்சென்று பெற்றோர்களைச் சந்தித்து அல்லது ஒலிப்பெருக்கி மூலமாவது இதனைச் செய்யலாமே எச்சரிக்கையுடன் சோப்பு, சானிடைசர், டெட்டால் ஆகியவற்றைக் கூடவே கொண்டு செல்லலாமே !. மேலும் கைகழுவும் செயல்முறைகள் மற்றும் பிறவற்றை அவர்களிடம் கொண்டு சேர்க்கலாமே!. இதற்காக அரிமா சங்கங்கள், சுழற்சங்கங்கள் ஆகியவற்றுடன் கைக்கோர்க்கலாமே!. இவர்கள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கு முகமூடி, கைகழுவும் நீர்மங்களை இலவசமாய்க்கூட கொடுக்கச் செய்யலாம்.
இது நம் கடமையும் கூட.
அந்தந்த துறை சார்ந்தவர்கள் செய்யட்டும் எனில் நாம் எதற்கு ஆசிரியர்கள் எனச் சொல்லிக்கொள்ள வேண்டும்?. சற்றேனும் சமூகத்தோடு நெருக்கமில்லாமல் இருக்கும் இப்படிப்பட்ட ஆசிரியர்களைத்தான் ஒட்டுமொத்த சமூகமும் வெறுக்கின்றன.
சிறந்த மாணவர்களை உருவாக்குபவர்கள் மட்டும் ஆசிரியர்கள் அல்ல சமூகத்திற்காக கடுகளவேனும் செயல்படுகிறவரும் தான் ஆசிரியர்.. நாம் துணிந்து இறங்கினால் எத்தனை பெற்றோர்கள் நம்முடன் இப்பணியில் கைகோப்பார்கள் எனது நமக்குத் தெரியவரும்.
அதனால் தான் ஆசிரியர்கள் "சமூகச் சிற்பிகள்" என அழைக்கப்படுகிறார்கள்.
0 Comments:
Post a Comment