புதிய கல்விக் கொள்கையின்கீழ் 4 ஆண்டு இளநிலைப் படிப்புகளை அமல்படுத்த டெல்லி பல்கலைக்கழகம் திட்டமிட்டு வருகிறது. எனினும் இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை குறித்துக் கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு வெளியானது. இக்கொள்கையை அமல்படுத்த டெல்லி பல்கலைக்கழகம், கடந்த செப்டம்பர் மாதம் குழுவொன்றை அமைத்தது. இக்குழு சார்பில் ஆலோனைகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கல்விக் கொள்கையின்கீழ் 4 ஆண்டு இளநிலைப் படிப்புகளை அமல்படுத்துமாறு குழுவினரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பல்கலை. அதிகாரி கூறும்போது, ''குழு உறுப்பினர்களுக்குக் கடந்த வாரம் மெயில் வந்திருந்தது. அதில் 4 ஆண்டு இளநிலைப் படிப்பு உள்ளிட்ட விதிமுறைகளைச் சேர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி ஹானர்ஸ் படிப்புகள் 4 ஆண்டுகள் படிப்பாக மாற்றப்படும். 3 ஆண்டுகளை முடிக்கும் மாணவர்களுக்குப் பட்டம் கிடைக்காது.
இப்படிப்புகளை வழங்காத இலக்கியப் படிப்புகளும் சிறு துறைகளும் மூடப்படும். அதேபோல இப்படிப்பில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டை முடித்துவிட்டு மாணவர்கள் வெளியேற விரும்பினால் அவர்களுக்கு முறையே சான்றிதழ் மற்றும் டிப்ளமோ பட்டம் வழங்கப்படும்.
ஏற்கெனவே 2014 ஆம் ஆண்டில் 4 ஆண்டு இளநிலைப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. எனினும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பலத்த போராட்டத்தால் அரசு அத்திட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. எனினும் 4 ஆண்டு இளநிலைப் படிப்புகளை அறிமுகப்படுத்துவது குறித்து இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை'' என்று தெரிவித்தார்.
இதற்கிடையே 4 ஆண்டு இளங்கலைப் படிப்புகளுக்கு ஆசிரியர் சங்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
0 Comments:
Post a Comment