திண்டுக்கல், டிச. 21: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் தங்கராஜன் தலைமை வகித்தார். செயலாளர் சுப்பிரமணி, மாநில இணைச் செயலாளர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் ராஜகுரு வரவேற்றார்.
பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் குமரேசன் நன்றி கூறினார். கூட்டத்தில், ‘ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 12 லட்சம் பேரின் நலன் கருதி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். 2004-6 ஆகிய ஆண்டுகளில் தொகுப்பூதிய பணிக்காலத்தை காலமுறை பணிக்காலமாக கணக்கில் கொண்டு பதவி உயர்வு மற்றும் தேர்வு நிலைக்கு அனுமதிக்க வேண்டும்.
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர் மீதான நடவடிக்கைகளை தமிழக அரசு ரத்து செய்திட வேண்டும். அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். ஆசிரியர்களின் நேரடி நியமன வயது அரசாணையை திரும்பப் பெற வேண்டும். தொடக்கக்கல்வி துறை பட்டதாரி ஆசிரியர்களை முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் உயர்கல்வி பயில முன் அனுமதி பெற்று பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் மாவட்ட கல்வி அலுவலரின் மேலொப்பம் பெறவில்லை எனக்கூறி நூற்றுக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் மறுக்கப்பட்டுள்ளது.
கடந்தகால அரசு அனுமதியின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் சிறப்பு நிகழ்வாக கருதி உயர்கல்விக்கான பின்னேற்பு வழங்கிட வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் எம்ஃபில் முன்னனுமதி வேண்டி விண்ணப்பித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன் அனுமதி வழங்கப்பட்டது போக, நிலுவையில் உள்ள அனைவருக்கும் முன்அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 Comments:
Post a Comment