சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறுவதையொட்டி 3 ஆண்டாக ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்: இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு:


சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறுவதையொட்டி 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் மூத்த முதன்மை செயலாளர் நரேந்திர புட்டோலியா தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில தலைமை செயலாளருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் சட்டப்பேரவை ஆயுட்காலம் 2021ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. புதுச்சேரி மாநிலத்தின் ஆயுட்காலம் ஜூன் 8ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து நேர்மையான, சுதந்திரமான முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக சொந்த மாவட்டங்களில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை அதே பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது. இதற்காக புதிய இடம் மாற்றம் மற்றும் பணி நியமனம் ஆகியவை தொடர்பான அறிவுறுத்தலை 2019ம் ஆண்டு ஜனவரி 16ல் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. 


அதன் அடிப்படையில் கீழ்கண்ட ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. அதிகாரிகள் அவர்களின் சொந்த மாவட்டத்தில் பணியமர்த்தப்பட கூடாது. கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆண்டுகள் நிறைவடையவில்லை என்றால் ஒரே இடத்தில் பணியாற்ற அனுமதி அளிக்கலாம். 3 ஆண்டுகள் நிறைவடைந்தவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் ஏற்கனவே பரிந்துரைத்த அதிகாரிகள், தண்டனை பெற்ற அதிகாரிகளுக்கு தேர்தல் பணி வழங்கக் கூடாது. அடுத்த 6 மாதங்களில் பணி ஓய்வு பெறும் அதிகாரிகள் தேர்தல் பணி வழங்க கூடாது. 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்ற தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த இடமாற்றம் உத்தரவு பொருந்தாது. இந்த ஆலோசனைகளை தேர்தல் நடத்தும் மாநில உயர் அதிகாரிகள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive