ஓய்வு பெற்ற அரசு பணியாளர், ஆசிரியர்களை போல் சத்துணவு, அங்கன்வாடி பணியாளருக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்* சமூக நலத்துறை ஆணையரை நேரில் சந்தித்து நிர்வாகிகள் வலியுறுத்தல்
சென்னை: ஓய்வு பெற்ற அரசு பணியாளர், ஆசிரியர்களை போல் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தை வழங்க வேண்டும் என்று சமூக நலத்துறை ஆணையரை நேரில் சந்தித்து நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கன்வீனர் மு.வரதராஜன், இணை கன்வீனர்கள் ஆர்.பாண்டியன், எஸ்.ராஜேந்திரன், டி.சிவாஜி ஆகியோர் சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்ததாவது:
சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக செயல்பட்டு, பதவி உயர்வில் சென்ற பணியாளர், பணி ஓய்வு பெற்ற பிறகு வாழ்வாதார ஓய்வூதியம் இல்லாமல் முதுமை காலத்தில் தவிக்கும் அவலநிலையில் உள்ளனர். முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று வாழ்வாதார ஒய்வூதியத்தை நிறைவேற்றி தர வேண்டும். பணி ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் அனைவருக்கும், சமையலர், உதவியாளர்களுக்கு வழங்கப்படும் வாழ்வாதார ஓய்வூதிய தொகை ₹2,000 என்பதை மாற்றி உயர்த்தி வழங்க வேண்டும்.
அத்துடன் கிராம உதவியாளர்களுக்கு வழங்கப்படுவது போல், அகவிலைப்படியுடன் குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற அரசு பணியாளர், ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போல், மருத்துவ காப்பீடு திட்டத்தை ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். சத்துணவு பணியாளர், அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆண்டு தோறும் மே மாதம் மட்டுமே பணியிட மாறுதல், பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என சமூக நல இயக்குநரக அலுவலக உத்தரவிலேயே பிறப்பித்துள்ளது. இந்த ஆண்டு மே மாதம் அதற்கான பணிகள் நடைபெறவில்லை. அதை உடனடியாக அமல்படுத்திட வேண்டும்.
ஆண் வாரிசுகளுக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு பணியாளர், ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போல் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் வாரிசுகளுக்கும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணி நியமனங்களில் 50 விழுக்காடு வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment