லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: உத்திரப்பிரதேச மாநிலத்தில் லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேரை கட்டாய பணி ஓய்வில் அனுப்பி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜ தலைமையிலான முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான ஆட்சியில், அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இருந்தாலும் அம்மாநிலத்தில் பாலியல் மற்றும் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் பிற மதத்தினரிடம் வன்முறையில் ஈடுபடுவதும் நடந்து வருகிறது. இதனால், பல்வேறு தரப்பினரின் கண்டனத்துக்கும் ஆதித்ய நாத் அரசு ஆளாவது வாடிக்கை. இந்நிலையில், மாநில முதல்வர் ஆதித்யநாத் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு அறிவிப்பை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பில் அரசு அதிகாரிகள் சரியாக காலை 9 மணிக்கு தங்களது அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். அப்படி அரசு அதிகாரிகள் சரியான நேரத்திற்கு தங்களது வேலைக்கு வரவில்லை அவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். அதே போல் மாவட்டத்தின் கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் சரியாக காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை மக்களை சந்திக்க வேண்டும் என்று அவர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அரசின் பல்வேறு துறைகளில் லஞ்ச, ஊழல் தலைவிரித்தாடுவது மாநில அரசுக்கு பெரும் தலைவலியாக மாறி வருகிறது. எனவே ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசு முடிவு செய்தது. ஊழலில் ஈடுபடுவோர், சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த மாதம் உத்தரவிட்டார். இந்நடவடிக்கையில் 600 பேர் சிக்கியுள்ளனர். லஞ்ச மற்றும் ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 600 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதில் சுமார் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.
மீதமுள்ள சுமார் 400 பேர் மீது, பணியிடமாற்றம், ஊதிய உயர்வு-பதவி உயர்வு போன்றவை ரத்து உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இந்த தண்டனையில் சிக்கிய அரசு ஊழியர்களில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் அடங்குவர். இவர்கள் மீதான தண்டனையை மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரைத்து உள்ளது. இதற்கிடையே பணியில் திறம்பட செயலாற்றாத மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய 50 வயதுக்கு மேற்பட்ட போலீசார் 50 பேருக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
0 Comments:
Post a Comment