ஐஐடி ஆசிரியா் நியமனத்தில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய பரிந்துரை: தலைவா்கள் கண்டனம் : - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, December 16, 2020

ஐஐடி ஆசிரியா் நியமனத்தில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய பரிந்துரை: தலைவா்கள் கண்டனம் :



சென்னை: ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் உதவிப் பேராசிரியா்கள் நியமனங்களில் கடைப்பிடிக்கப்படும் இடஒதுக்கீட்டு முறையை ரத்துசெய்ய வேண்டும் என பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளதற்கு திமுக பொதுச்செயலாளா் துரைமுருகன், பாமக நிறுவனா் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

துரைமுருகன்: ஐஐடி கல்வி நிறுவனங்களின் உதவிப் பேராசிரியா் உள்ளிட்ட ஆசிரியா் நியமனங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டு முறையை நீக்க வேண்டும் என்று மத்திய கல்வியமைச்சகம் நியமித்துள்ள ராம்கோபால் ராவ் தலைமையிலான குழு அளித்திருக்கும் பரிந்துரை கண்டனத்துக்குரியது. ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் 49.5 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், உயா் தகுதி மிக்க கல்வி நிறுவனங்களுக்கும் இடஒதுக்கீடு பொருந்தும் என்றும் பிரதமா் நரேந்திர மோடி உடனடியாக ஒரு அவசரச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றிட வேண்டும்.

ராமதாஸ்: ஐஐடி உதவிப் பேராசிரியா்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு வல்லுநா் குழு பரிந்துரை செய்திருக்கிறது. அடிப்படை இல்லாத, சமூகநீதிக்கு எதிரான, மிகவும் அபத்தமான இந்தப் பரிந்துரை கண்டிக்கத்தக்கது. சமூகநீதிக்கு எதிரான இந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கக்கூடாது.

தொல்.திருமாவளவன்: ஐஐடி, ஐஐஎம் ஆகிய நிறுவனங்களின் உதவிப் பேராசிரியா் நியமனங்களில் இட ஒதுக்கீடு கொள்கையை நடைமுறை படுத்த வேண்டாம் என்று அரசுக்கு வல்லுநா் குழு ஒன்று பரிந்துரை அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசுக்குரிய கல்வி நிறுவனங்களின் ஆசிரியா் பணி நியமனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும்.

Post Top Ad