காத்திருப்போர் பட்டியலில் 51 மாணவர்கள்: அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் அதிகரிக்க முடியுமா?...NMC பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.!!! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, December 11, 2020

காத்திருப்போர் பட்டியலில் 51 மாணவர்கள்: அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் அதிகரிக்க முடியுமா?...NMC பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.!!!



7.5% ஒதுக்கீட்டில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் அதிகரிக்க முடியுமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி  மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தினால் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள்  தர்ஷினி மற்றும் இளக்கியா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், 7.5% ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும் என தமிழக அரசு கடந்த நவம்பர் 20-ம் தேதி  அறிவித்தது. இதற்கிடையே, கட்டணத்தை தமிழக அரசு ஏற்கும் என்ற அறிவிப்பை முன்தேதியிட்டு அமல்படுத்த கடலூர் மாணவிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தனர். வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வேங்கடேசன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில், அகில இந்திய  மருத்துவ கலந்தாய்வு முடிந்தப் பின்னும் மீதமுள்ள 160 இடங்களில், 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் 12 இடங்கள் கிடைக்கும் என்றும் சில மருத்துவ கல்லூரிகள் மூலம் கூடுதல் இடம்  கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, முதல் கலந்தாய்வில் பங்கேற்று தனியார் கல்லூரியில் இடம் பெற்று காத்திருப்போர் பட்டியலில் உள்ள 51 மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, 51 மாணவர்களுக்கும் இடங்கள் கிடைக்க தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவ கல்லூரிகளில் தலா 2 இடங்களை அதிகரிக்க முடியுமா? என்று தேசிய மருத்துவ ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை டிசம்பர் 17-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

Post Top Ad