தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 21 ஆயிரம் நர்சுகளுக்கு பயிற்சி


இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுகிறது. இந்த வைரஸ் வழக்கமான கொரோனா வைரசை விட 70 சதவீதம் அளவுக்கு வேகமாக பரவும் வகையில் வீரியமிக்கதாக உள்ளது.

இதையடுத்து இங்கிலாந்தில் இருந்து வரும் விமான போக்குவரத்துக்கு மத்திய அரசும், மாநில அரசும் தடை விதித்துள்ளது.

இந்தநிலையில் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் முன்எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இங்கிலாந்தில் இருந்து வந்த 2724 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். முதல் கட்டமாக 926 பேரை தொடர்பு கொண்டோம். அவர்களில் 511 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கார்கோ விமானத்தில் 9 பயணிகள் வந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசிடம் பேசி உள்ளோம். நவம்பர் 25-ந் தேதியில் இருந்து கடந்த 23-ந் தேதி வரை வெளிநாடுகளில் இருந்து வந்த 38 ஆயிரம் பேரின் விவரங்களையும் சேகரித்துள்ளோம். அவர்கள் அனைவரும் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

மற்ற மாநிலங்களை விட தமிழக அரசு தான் இ-பாஸ் நடைமுறைகளை பின்பற்றி வருகிறது. இதன் மூலம் தமிழகத்துக்கு வரும் அனைவரது விவரங்களையும் சேகரித்துள்ளோம்.

பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதில்லை. அவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.


கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 1.42 லட்சம் படுக்கை வசதிகள் அரசிடம் உள்ளன. சென்னை விமான நிலையத்தில் நிரந்தர கொரோனா பரிசோதனை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இங்கிலாந்தை போல தென் ஆப்பிரிக்காவில் இருந்து வருபவர்களையும் கண்காணித்து வருகிறோம்.

டெல்லியில் இருந்து வந்த 3 பேர் மருத்துவ குழுவினருக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் சென்றனர். திருநின்றவூர், திருத்தணி, புதுச்சேரி ஆகிய பகுதிகளை சேர்ந்த அந்த 3 பேரையும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளோம். இதுபோன்று மருத்துவ குழுவினருக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் சென்றால் போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் முதல்கட்டமாக 5 லட்சம் சுகாதார பணியாளரர்கள், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும். அவர்களின் விவரங்களை சேகரித்துள்ளோம்.

கொரோனா தடுப்பூசி போடுவதற்காக 21 ஆயிரம் நர்சுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 46 ஆயிரம் மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

கொரோனா தடுப்பூசியை பதப்படுத்துவதற்கான வசதிகளும், சேமித்து வைப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் முதியவர்கள் அதிகம் என்பதால் கூடுதலான தடுப்பூசி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இங்கிலாந்தில் இருந்து கொரோனா தொற்று பாதிப்புடன் வந்தவர் நலமுடன் உள்ளார். அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive