கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தையும், மருத்துவம் படிக்க அவர் எடுக்கும் முயற்சியும், அத்தனை எளிதில் மறக்க முடியாது. ஆனால் ஒடிஷாவில் 64 வயதான ஜெய்கிஷோர் பிரதான் என்பவர், நீட் தேர்வில் வென்று, சாம்பல்பூர் மாவட்டம் புர்லா அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு MBBS படிப்பில் சேர்ந்து ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.
பர்கார் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியான ஜெய்கிஷோருக்கு சிறு வயது முதலே மருத்துவப் படிப்பில் ஆர்வம் இருந்துள்ளது. ஒருமுறை மட்டும் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதி தோற்றதால் வாழ்க்கை திசை மாறி அவருக்கு வங்கிப்பணி கிடைத்தது. பணியால் அவரின் மருத்துவ கனவு வெறும் கனவாகவே இருந்ததுள்ளது. 2016ல் ஓய்வுபெற்ற அவர், தனது மருத்துவக்கனவை நிஜமாக்க தீர்மானித்து, 2019 நீட் தேர்வுக்காக தினசரி 10 முதல் 12 மணி நேரம் படித்தார். நீட் தேர்வுக்கு வயது வரம்பில்லை என்ற தளர்வு இவருக்கு கை கொடுத்தது. நீட் தேர்வில் வென்று நாட்டிலேயே தனித்துவமான வகையில் எம்பிபிஎஸ் படிப்பிலும் சேர்ந்துள்ளார்.
தனது தந்தைக்கு செய்த அல்சர் அறுவை சிகிச்சை காரணமாக அவர் கூடுதலாக 30 ஆண்டுகள் வாழ்ந்ததாக நினைவுகூரும் ஜெய்கிஷோர், அந்த தருணத்தில் மருத்துவராக முடிவுசெய்து அதற்காக உழைத்ததாகக் கூறுகிறார். மற்றொரு விசித்திரமாக அதே கல்லூரியில் ஜெய்கிஷோரின் மகள் 2ம் ஆண்டு பல் மருத்துவம் படித்து வருகிறார்.
0 Comments:
Post a Comment