
அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கும் திட்டம் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.
தந்தை பெரியாரின் 142-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் ஆன்லைன் வகுப்புக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
மாணவர்களின் நலன் கருதியும் அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும் செப். 21 முதல் 25-ம் தேதி வரை ஆன்லைன் வகுப்பு கூடாது என்று அரசு முடிவெடுத்துள்ளது. காலாண்டு விடுமுறையாகக் கருதி, அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முழுமையான பள்ளிக் கட்டணத்தை வசூலிப்பதாக 14 பள்ளிகள் மீது புகார்கள் வந்ததன் பேரில் அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. முழுமையான அறிக்கை வந்தபின் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கும் திட்டம் அரசுக்கு இல்லை. பொருளாதார நெருக்கடியில் அரசால் இதுபோன்று அறிவிக்க இயலாது.
பெற்றோர் மற்றும் மாணவர்களின் மனநிலை, கரோனா பாதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பள்ளியைத் திறப்பது குறித்து முடிவு செய்வோம்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment