
நீட், ஜேஇஇ நுழைவுத்தேர்வுவினாத்தாள்களில் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 90 சதவீத கேள்விகள் இடம்பெற்றதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வு செப்.13-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை நாடு முழுவதும் 14.37 லட்சம் பேர் எழுதினர்.
இதேபோல், ஐஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு செப்.1 முதல் 6-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 6.35 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
இதற்கிடையே நீட், ஜேஇஇ தேர்வு வினாத்தாள்கள் தேசியகல்வியியல் ஆராய்ச்சி மற்றும்பயிற்சிக் குழுமத்தின் (என்சிஆர்டிஇ) பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன. இதனால் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழக பள்ளிக்கல்வியில் 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் 2018-ம் ஆண்டு முதல் படிப்படியாக அமல்படுத்தப்பட்டது.
அதன் பலனாக நடப்பு ஆண்டு நீட், ஜேஇஇ தேர்வுகளில் 90 சதவீத வினாக்கள் தமிழக பாடப்புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவில் இடம்பெற்ற பேராசிரியர்கள் சுல்தான், நரசிம்மன், ரீட்டா ஜான் ஆகியோர் கூறியதாவது:
நடப்பு ஆண்டு நீட் தேர்வில் மொத்தமுள்ள 180 வினாக்களில் உயிரியலில் 87, வேதியியலில் 43, இயற்பியலில் 44 என 174 கேள்விகள் (97%) 11, 12-ம் வகுப்பு பாடப் புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டன. இதனால் நடப்பு ஆண்டு நம் மாணவர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவார்கள்.
எளிதாக வெற்றி பெறலாம்
உலக அளவில் பள்ளிக்கல்வியில் சிறந்த முன்னணி நாடுகளில் உள்ள பாடத்திட்டம், நம் நாட்டில்சிபிஎஸ்இ மற்றும் பல்வேறு மாநில பாடநூல்களை முழுவதும் ஆய்வுசெய்து, அதன் அடிப்படையில் தரமான பாடப் புத்தகங்கள் நம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதை முழுமையாக படித்தாலேயே மாணவர்கள் நீட் உட்பட போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இயற்பியல் ஆசிரியர் முருகநாதன் கூறும்போது, ‘‘நீட் மட்டும்இன்றி ஜேஇஇ தேர்விலும் 90%கேள்விகள் நம் பாடப்புத்தகங்களில் இருந்தே இடம்பெற்றன. இங்கு என்சிஇஆர்டி பாடத்திட்டம்தான் சிறந்தது என்ற மாயபிம்பம் நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆனால், பல்வேறு தனியார் பயிற்சிமையங்களில் தமிழக அரசின் பாடப் புத்தகங்களைத்தான் பயன்படுத்தி தற்போது தேர்வுக்கு தயாராகின்றனர்.
அதனால் அரசுப் பள்ளி மாணவர்கள் தாழ்வு மனப்பான்மையை உடைத்து 11, 12-ம் வகுப்பு பாடப் புத்தகங்களைப் படித்தாலே, அனைத்து வகை தேசிய நுழைவுத் தேர்வுகளிலும் வெற்றி பெறலாம்’’ என்றார்.
0 Comments:
Post a Comment