வாழ்க்கையில் இனி வரக்கூடாத விடுமுறை சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் பதிவு
வாழ்க்கையில் இனி வரக்கூடாத விடுமுறை
சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் பதிவு கொரோனாவால் ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் வாழ்க்கையில் இனி வரக்கூடாத விடுமுறை என்று சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு வேகமாக பரவி வருகிறது.
‘மீம்ஸ் கிரியேட்டர்கள்’
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த காலக்கட்டத்தில் ஊரடங்கை கேலி கிண்டல் செய்தும், ஊரடங்கின் அவசியத்தை வலியுறுத்தியும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக மீம்ஸ் கிரியேட்டர்களின் எண்ணத்தில் உருவான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. இதற்கு நெட்டிசன்கள் தங்களுடைய ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் ஊரடங்கு குறித்து வாட்ஸ்அப், டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்பட பல்வேறு சமூக வலைத்தளங்களில் ஊரடங்கு விடுமுறை என்ற தலைப்பிலான பதிவு வைரலாகி நெட்டிசன்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பதிவு தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இனி வரக்கூடாத விடுமுறை
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அந்த பதிவு வருமாறு:-
உலகம் இதுவரை கண்டிராத விடுமுறை...
உலகளவில் இதுவே அதிகநாட்கள் விடப்பட்ட முதல் விடுமுறை...
குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் விடுமுறை...
வீட்டுக்குள்ளேயே மகிழ்ச்சியை காணும் விடுமுறை...
வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத விடுமுறை...
வாழ்க்கையை பல கோணங்களில் புரிய வைக்கும் விடுமுறை...
வாழ்க்கையில் இப்படி இனி வரக்கூடாத ஒரு விடுமுறை...
வாகனங்கள் இல்லாத விடுமுறை...
குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்புகள் இல்லாத விடுமுறை...
சுற்றுலா செல்ல முடியாத நீண்ட விடுமுறை...
அக்கம், பக்கத்தினர் வீடுகளுக்கு செல்லமுடியாத விடுமுறை... திருவிழாக்கள் இல்லாத விடுமுறை...
மத வழிபாட்டுதலங்களுக்கு செல்ல முடியாத விடுமுறை...
எது இல்லாமல் மனிதன் வாழ முடியும் என புரியவைத்த விடுமுறை...
செலவுகள் குறைவான விடுமுறை...
உலகமே ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய விடுமுறை... இயற்கையை பாதுகாக்கும் விடுமுறை...
இருந்தாலும் பெண்களுக்கு இல்லை விடுமுறை...
ஏனென்றால் பசிக்கு இல்லை ஒருபோதும் விடுமுறை...
இவ்வாறு அதில் உள்ளது.
கூட்டம் எங்கே கூடும்?
இதேபோல இன்னொரு மீம்சும், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஊரடங்கு முடிந்த உடனேயே மக்கள் கூட்டம் எங்கு அதிகம் கூடும்? என்பதற்கு முடியை வெட்டுவதற்காக சலூன் கடையும், தொப்பையை குறைப்பதற்காக உடற்பயிற்சி கூடமும் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்வது போல் உள்ளது.
ஆனால் நான் ஒருவன் இங்கே இருப்பதையே மறுந்துவிட்டீர்கள் என்று கூறுகிறது டாஸ்மாக் கடை. அந்த மீம்ஸ், சலூன் கடை, உடற்பயிற்சி கூடத்தை விடவும் அதிகமானோர் ஊரடங்கு முடிந்த உடனேயே டாஸ்மாக் கடைக்கு செல்வார்கள் என்பதை கிண்டலாக கூறுகிறது.