கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் முற்றுகை போராட்டம் - ஆசிரியர்கள் சங்கம்
அரசுப் பள்ளிகளில் அனைத்துப் பணிகளையும் செய்து வரும் தொகுப்பூதியப் பணியாளர்களை நிரந்தரப்படுத்தாவிட்டால் பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்க மாநில நிர்வாகிகளுக்கான அவசரக் கூட்டம் எழும்பூரில் இன்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் இளமாறன், "இக்கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம். அவற்றில்,
5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளை அறிவித்து, பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைத்த உத்தரவை ரத்து செய்ததற்காக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
புதிதாக உருவாக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களுக்கு முதன்மைக் கல்வி அதிகாரிகளை நியமிக்க கோரிக்கை வைக்கிறோம்.
2014-15 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட கணக்காளர், கணினி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களில் 1,512 பேருக்கு தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அவர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும்.
இவர்களுக்கு மத்திய ஆரசால் ஒதுக்கப்பட்ட நிதியை வழங்காமல் தமிழக அரசு இழுத்தடிக்கிறது. அதனை உடனே வழங்க வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறையின் அறிவுரைகளை அரசுப் பள்ளிகளைத் தவிர, பிறப் பள்ளிகள் கடைபிடிப்பதில்லை என்பதால் தனியார் பள்ளிகளை அரசுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்.
அரசுப்பள்ளி ஆசிரியர்களில் உயர் கல்வி பயின்றவர்களுக்கு ஊக்கத்தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
கட்டாயக் கல்வித்திட்டத்தின் கீழ் 25 சதவிகித மாணவர்களை சேர்க்க வேண்டும் என்கிற விதியை தனியார் பள்ளிகள் நடைமுறைப்படுத்துகிறதா என அரசு கண்காணிக்க வேண்டும்.
கற்றல் குறைபாடு எனக்கூறி அரசுப் பள்ளி கற்பிக்கும் பணிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தி ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடாது.
கடந்த பத்து ஆண்டுகளாகவே பல தனியார் பள்ளிகளில் இடைநிற்றல் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக 8 மற்றும் 9 ஆம் வகுப்புகளில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்படுவதை அரசு தடுக்க வேண்டும்.
எங்களின் கோரிக்கைகளை கல்வி அமைச்சரிடம் நேரில் சென்று கொடுக்க உள்ளோம்.