சி.பி.எஸ்.இ பள்ளிகளை மிஞ்சும் அதிநவீன வசதிகளுடன் திருவண்ணாமலையில் அரசு தொடக்கப்பள்ளி!
திருவண்ணாமலை மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ பள்ளிகளை மிஞ்சும் வகையில் அதிநவீன வசதிகளுடன் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளியில் 60 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பழமையான இந்த பள்ளியை 27 லட்சம் ரூபாய் மதிப்பில் அண்மையில் மாவட்ட நிர்வாகம் புதுப்பித்தது.
முகப்பு தோற்றத்திலேயே தனியார் நிறுவனமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அளவுக்கு புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த பள்ளி கட்டிடங்களில் மாணவர்களை கவரும் வகையில் இயற்கை மற்றும் வனவிலங்குகளின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. வகுப்பறைக்குள் மாணவர்கள் அமர வட்டவடிவிலான சிறிய மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஸ்மார்ட் கிளாஸ், அதிவேக இணைய வசதி, வகுப்பறை முழுவதும் குளிர்சாதன வசதி என நவீன மயமாக்கப்பட்டுள்ளது.
பயோமெட்ரிக் முறையில் மாணவர்களின் வருகை பதிவு செய்யப்படுவதுடன், மாணவர்கள் தங்களது நோட்டு புத்தகங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு என்று தனியாக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. புறா வளர்ப்பது, தோட்டக்கலை குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. பள்ளியை பராமரிக்க மாணவர்கள் அடங்கிய குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களை அழைத்து வர ஆட்டோ வசதி,
சீருடை என அனைத்திலும் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதால், மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதாக பள்ளி தலைமை ஆசிரியை ரோஸ் நிர்மலா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். வேங்கிக்கால் தொடக்கப் பள்ளியை போன்று அனைத்து அரசு பள்ளிகளையும் நவீனப்படுத்த அரசு முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.








0 Comments:
Post a Comment