கோவை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுப் பட்டியலை வெளியிடாமல் மூடி மறைப்பு: தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் குற்றச்சாட்டு:Covering up the non-disclosure of the list of best author awards in Coimbatore district: Allegation of lack of transparency in the examination

கோவை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுப் பட்டியல் வெளியிடப்படாமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது. தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு குடியரசு முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வானோர் விவரத்தைக் கடந்த செப். 5-ம் தேதி பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதில் மாநிலம் முழுவதும் 375 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் விவரம் பல்வேறு மாவட்டங்களில் வெளியிடப்பட்டு, நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்றோர் பட்டியலை வெளியிடாமல் மறைப்பதாகவும், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருது வழங்காமல் இழுத்தடிப்பதாகவும் ஆசிரியர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஊடகங்கள், ஆசிரியர் சங்கங்கள் பலமுறை கேட்டும் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப.உஷா, நல்லாசிரியர் விருதுப் பட்டியலை வெளியிட மறுத்து விட்டார். மாறாக 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்ற எண்ணிக்கையை மட்டுமே குறிப்பிட்டார்.
இந்நிலையில் நேற்று (செப். 7) திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட அருகமை மாவட்டங்களில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் தேர்வான ஆசிரியர்களையும் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு வருமாறு செல்போனில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி காலை 10 மணிக்கு வந்த ஆசிரியர்கள் பல நேரம் காத்திருந்தும் எவ்விதத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
பிற்பகலில் முதன்மைக் கல்வி அலுவலர், ஆசிரியர்கள் மீண்டும் அழைப்பதாகவும் தற்போது அவர்களைச் செல்லுமாறும் அறிவுறுத்த, அவர்கள் ஏமாற்றத்துடன் சென்றதாக, நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவர், 'இந்து தமிழ்' இணையத்திடம் வேதனை தெரிவித்தார். இது எங்களை அவமதிக்கும் செயல் என்றும் அவர் கூறினார்.
இது குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் சி.அரசு கூறும்போது, ''நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் விருது வழங்கட்டும். ஆனால் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரத்தை வெளியிடுவதில் என்ன பிரச்சினை இருக்கப் போகிறது என்று தெரியவில்லை. இது நல்லாசிரியர் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதைக் காட்டுகிறது.
நேற்று ஆசிரியர்கள் வரவழைத்துப் பல மணி நேரம் காத்திருக்கச் செய்துவிட்டு, திருப்பி அனுப்பியது வேதனையளிக்கிறது. இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை விசாரணை நடத்த வேண்டும். வரும் காலங்களில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும்'' என்றார்.
இதேபோல் ஆசிரியர் சங்கத்தினர் கூறும்போது, ''இந்நிகழ்வு குறித்து பள்ளிக் கல்வித்துறைக்குப் புகார் அனுப்பியுள்ளோம். இதேபோல் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கும் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்'' என்றனர்.







0 Comments:
Post a Comment