
கோவை:கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு, இறுதிகட்ட பயிற்சி அளிக்கும் வகையில், 'ஆன்லைன்' வாயிலாக, சிறப்பு வகுப்புகள் நேற்று துவங்கின. முதன்மை கல்வி அலுவலர் உஷா துவக்கி வைத்தார்.ஜூன் 1ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் துவங்கும் என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, இறுதிகட்ட பயிற்சி அளிக்கும் வகையிலும், தொடர்ந்து பிற வகுப்பு மாணவர்களுக்கு வழக்கமான வகுப்புகளை துவக்கவும், cbeschools.in என்ற வலைதளம் வாயிலாக, 'ஆன்லைன்' கற்றல் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, 20 பள்ளிகள் இவ்வலைதளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இதன் துவக்கவிழா நேற்று நடந்தது; அரசு துணிவணிகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ராஜேஷ்குமார், அறிவியல் பாடங்கள் சார்ந்த பயிற்சியை, மாணவிகளுக்கு வழங்கினார்.இது குறித்து, முதன்மை கல்வி அலுவலர் உஷா கூறியதாவது:ஊரடங்கில் இருக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், பாடங்களை மறந்து விடக்கூடாது என்பதற்காக, 'ஆன்லைன்' வாயிலாக, கற்பித்தல் பணிகளை துவக்கியுள்ளோம். இவ்வலைதளத்தில், 200 பள்ளிகளை இணைக்கலாம்.முதல்கட்டமாக, 20 பள்ளிகளை இணைத்துள்ளோம்.
இவ்வலைதள 'லிங்க்' பயன்படுத்தி, மாணவர்கள் வீடுகளில் இருந்து பாடங்களை கவனிக்க முடியும்; சந்தேகங்களையும் கேட்டு விளக்கம் பெற முடியும்.ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டத்தையும், நடத்த இயலும். முதல் நாளான இன்று(நேற்று), சில மாணவிகள் கூறிய, சிறு சிறு பிரச்னைகள் சரி செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சிகளை அளிக்கவுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.