உரிமம் இல்லாத கடைகளை கண்டறிய மாணவர்கள் மூலம் களஆய்வு: உணவு பாதுகாப்பு துறை முடிவு
உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் இன்றி செயல்படும் கடைகளைக் கண்டறிய கல்லூரி மாணவர்கள் மூலம் களஆய்வு நடத்த உணவு பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளது. சென்னையில் ஆயிரக்கணக் கான நிறுவனங்கள், கடைகள், ஹோட்டல்கள், உணவு தயாரிப்பு, விற்பனை, சேமிப்பு, விநியோகம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இத்தகைய பணிகளில் ஈடுபடுபவர்களின் ஆண்டு விற்றுமுதல் (டர்ன்ஓவர்) ரூ.12 லட்சத்துக்கு மேல் இருந்தால் உணவு பாதுகாப்புத் துறையிடம் உரிமம் பெற வேண்டும். ரூ.12 லட்சத்துக்குக் கீழ் இருக்கும் கடைகள், நிறுவனங்கள் உணவு பாதுகாப்பு துறையில் பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும். இவ்வாறு, உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை நுகர்வோர் பார்வையில் படும்படி கடைகளில் வைக்க வேண்டும். சென்னையில் சுமார் 73 சதவீதம் கடைகள், நிறுவனங்கள் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் பெற்று இயங்கி வருகின்றன. மீதமுள்ளவர்களையும் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்தகைய கடைகள் மற்றும் நிறுவனங்களை கல்லூரி மாணவ ர்களைக் கொண்டு கள ஆய்வு நடத்தி கண்டறிய உணவு பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னையில் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் இன்றி செயல்படும் கடைகளைக் கண்டறிய முடிவு செய்துள்ளோம். இதன் அடிப்படையில், தன்னார்வலர்களாக விருப்பம் தெரிவித்து வரும் கல்லூரி மாணவர்கள் மூலம் சென்னை முழுவதும் உள்ள கடைகளைக் களஆய்வு செய்து கணக்கெடுக்க உள்ளோம். சட்டப்படி நடவடிக்கைஅதன்மூலம், எத்தனை கடைகள், நிறுவனங்கள் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் இன்றி செயல்பட்டு வருகின்றன என்பது தெரியவரும்.அதைத் தொடர்ந்து, உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். இதற்காக கல்லூரிகளை அணுக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment