அரசு ஊழியர்-ஆசிரியர் மீதான நடவடிக்கைகளை கைவிட வேண்டும்: பேரவையில் திமுக கோரிக்கை
போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு கோரிக்கை விடுத்தார்.
சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசினார். அப்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலரும் பணிக்குத் திரும்பி விட்டனர். அவர்களில் 1,990 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதில் 1,363 பேர் வரை மீண்டும் பணியில் சேர்ந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் மீதான நடவடிக்கை தொடர்கிறது. மேலும், 5,665 ஊழியர்கள் மீது 17 (பி) பிரிவின்கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கைவிட அரசு முன்வர வேண்டும். அவர்களுக்குரிய பிரச்னைகள், கோரிக்கைகளைப் பேசித் தீர்வு காண வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, இதைப் பற்றி பேரவையில் விவாதிப்பது நீதிமன்ற விஷயத்தில் தலையிடுவதாகிவிடும். எனவே, பேரவையில் விவாதிக்க முடியாது என்றார்







0 Comments:
Post a Comment