கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 81 பாடப் பிரிவுகள் தொடங்கப்படும் : அமைச்சர் அறிவிப்பு
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 81 பாடப் பிரிவுகள் தொடங்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார். சட்டப்பேரவையில் உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்புகள்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பில் புதிதாக 81 பாடப்பிரிவுகள் 2019-20-ஆம் ஆண்டில் தொடங்கப்படும்.
தருமபுரி பாலக்கோடு மற்றும் நாமக்கல் மோகனூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வியைச் சிறப்பான முறையில் வழங்கும் பொருட்டும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தால் வரையறை செய்யப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை நிறைவு செய்யும் பொருட்டும் ஆய்வகங்கள், நூலகம், பயிற்சி பட்டறை உள்பட நிர்வாக மற்றும் வகுப்பறை கட்டடங்கள் ரூ.37.07 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
சென்னை மாநிலக் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்காக புதிய மகளிர் விடுதி ரூ.9.90 கோடி செலவில் கட்டப்படும். தமிழகத்தில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் மனிதவளம் மற்றும் நிதி மேலாண்மையைச் சிறப்புற நிர்வகிக்க திறன்மிகு செயலமைப்பு அவசியமென்பதால், கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தில் மின் ஆளுமைத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக ரூ.1 கோடி செலவு ஆகும் என்றார்.
0 Comments:
Post a Comment