மும்மொழி கொள்கை குறித்து பிரதமருக்கு, முதல்-அமைச்சர் கடிதம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

மும்மொழி கொள்கை குறித்து பிரதமருக்கு, முதல்-அமைச்சர் கடிதம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


மும்மொழி கொள்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுத இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டி வருமாறு:- பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் அனைவருக்கும் மடிக்கணினிகளை தமிழக அரசு தொடர்ந்து வழங்கிவருகிறது.
2017-18 மற்றும் 2018-19 ஆகிய ஆண்டுகளில் படித்து முடித்த மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்க அரசு தற்போது அரசாணை பிறப்பித்துள்ளது. தற்போது பயின்றுவரும் மாணவர்களுக்கு முதற்கட்டமாகவும், கடந்த 2 ஆண்டுகளில் படித்துமுடித்த மாணவர்களுக்கு மூன்று மாதங்களுக்குள்ளாகவும் மடிக்கணினிகள் வழங்கப்படும். இதற்காக போராட்டம் நடத்துவது வேதனைக்கு உரியது. மாணவர்களுக்கு இன்று புதிதாக வழங்கப்பட்டுள்ள பாடத்திட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஓரிரு பாடத்திட்டங்கள் மாணவர்களை சென்றடையவில்லை என புகார்கள் வந்துள்ளன. அவை விரைந்து சென்றடைய நடவடிக்கைஎடுத்துவருகிறோம். ‘க்யூ-ஆர் கோடு’ மூலமாக அதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக 102 கோடி ரூபாய் தனியார் பங்களிப்புடன் அளிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தனியார் பள்ளிகள் ஒருவேளை மட்டுமேதிறப்பதாக தகவல்கள் வந்தன. தேவையான கட்டமைப்பு வசதிகளைசெய்யவேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். அப்படி செய்யாத பள்ளிகள் குறித்து கவனத்துக்கு கொண்டுவந்தால் நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. மும்மொழி கொள்கை குறித்து நாளை மறுநாள் பிரதமருக்கு, முதல்-அமைச்சர் கடிதம் எழுத உள்ளார்.
இந்த ஆண்டு அச்சடிக்கப்பட்டுள்ள பாடங்களில் சிறு குறைபாடுகள் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் விளக்கம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அவை திருத்தப்பட்டு அந்த குறைபாடுகள் வராமல் பார்த்துக்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.




Recent Posts

Total Pageviews

Code

Blog Archive